அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகை.

அரியலூரில் கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகை.

கலெக்டர் அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 546 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெற்றார். பின்னர் அந்த கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.


இதில் அரியலூர் மாவட்டம், வெண்மான்கொண்டான் ஊராட்சியை சேர்ந்த வடகடல் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் நேற்று கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பொதுமக்களை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் கலெக்டர் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு, பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க செல்லுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் டி.ஜி.வினயிடம் மனு அளித்தனர். அதில், வடகடல் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்களின் குடிநீர் தேவைக்காக 2 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியும், 4 ஆழ்குழாய் கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குடிநீர் தட்டுப்பாடு
இந்நிலையில் தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவிட்டதால், குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறோம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து வடகடல் கிராமத்தில் புதிய ஆழ்குழாய் அமைத்து தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.


இதேபோல் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட துணை செயலாளர் தண்டபாணி கொடுத்த மனுவில், அரியலூரில் உள்ள ஏரி, குளங்களை தூர்வாரி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.


இந்த கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரங்களும், சமூக பாதுகாப்புத்திட்டம் சார்பில் 23 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையும் வழங்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Leave a Reply

%d bloggers like this: