அரியலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து ; 3 பேர் பலி

அரியலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து ; 3 பேர் பலி


கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டத்தில் மாலூர் அருகே உள்ள மாஸ்தி கிராமத்தை சேர்ந்தவர்கள் நாராயணசாமி மகன்கள் ஆனந்த்குமார் (வயது 30), அனில்குமார் (26), முனிராஜ் மகன் ஸ்ரீகாந்த் (20), சுப்பிரமணியன் மகன் நந்தகுமார் (24), ரவிக்குமார் மகன் ஜோசாந்த்(18), கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பேரிக்கை கிராமத்தை சேர்ந்தவர் மற்றொரு ஸ்ரீகாந்த் (26) மற்றும் நாகேந்திரன் (28).

இவர்கள் 7 பேரும் பெங்களூரில் இருந்து திருநள்ளாறில் உள்ள ஒரு கோவிலுக்கு பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஒரு காரில் புறப்பட்டனர். காரை ஆனந்த்குமார் ஓட்டிச் சென்றார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே தழுதாழை மேடு கிராமம் அருகே சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக எதிரே மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஆனந்த்குமார், அவரது தம்பி அனில்குமார் மற்றும் நாகேந்திரன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற 4 பேரும் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.

இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தபின் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள நங்குடி கிராமத்தை சேர்ந்த காந்தி (28) என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: