கத்தரிக்காய் மகசூல் அதிகரிக்க சில டிப்ஸ்!
கத்தரிக்காய் மகசூல் அதிகரிக்க வழி கூறும், சிவகங்கை, குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்துார்குமரன் கூறுகிறார் :
- கத்தரியில் ஒவ்வொரு ரகமும், ஒவ்வொரு அளவில் மகசூல் தரக்கூடியவை; அதிக மகசூல் தரும் வீரிய ரகங்களும் உள்ளன.ஒரு ஏக்கரில் விதைக்க, நாட்டு ரகம் எனில், 80 கிராம், வீரிய ரகம் எனில், 40 கிராம் போதுமானது.
- எந்த ரகமாக இருந்தாலும், அதை விதை நேர்த்தி செய்வதால், முளைப்புத்திறன் அதிகரிப்பதோடு, நோய்களும் தடுக்கப்படும்.விதை நேர்த்திக்கு, 40 கிராம் அசோஸ் ஸ்பைரில்லத்தை, அரிசி வடிகஞ்சியில் கலந்து, விதையை அதில் மூழ்கி எடுத்து, நிழலில் இரண்டு மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
- பின், 1 கிலோ விதைக்கு, 4 கிராம் என்ற அளவில், ‘டிரைக்கோடெர்மா விரிடி’ அல்லது 10 கிராம், ‘சூடோமோனஸ்’ எடுத்து, விதைகளை புரட்டி, இரண்டு மணி நேரம் வைத்திருந்து, நாற்றாங்காலில் விதைக்க வேண்டும்.
- வயலில், 10 அடி நீளம், 3 அடி அகலம், அரை அடி உயரத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து, பாத்தியின் மேல், 10 செ.மீ., இடைவெளியில் ஆள் காட்டி விரலால் வரிசையாக கீறி, கீறல் மீது, கோலப் பொடியை துாவுவது போல, நேர்த்தி செய்த விதைகளை துாவ வேண்டும்.
- விதைகளை மண் மூடுமாறு கையால் கிளறி, வைக்கோல் போட்டு மூடி, பூவாளியில் தண்ணீர் தெளிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு வாரம் தண்ணீர் தெளித்து வந்தால், விதைகள் முளைத்து வரும்.
- 10ம் நாளில் வைக்கோலை நீக்கி விடலாம். 40 நாட்களில் நாற்றை பறித்து, நடவு செய்யலாம்.நடவு செய்த, மூன்றாம் நாளும், தொடர்ந்து வாரம் ஒருமுறையும், பாசனம் செய்தால் போதுமானது.
- சொட்டு நீர் பாசனம் செய்தால், மூன்று நாட்களுக்கு ஒருமுறை கொடுக்கலாம்.நடவு செய்த, 20ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை, 1 லி., தண்ணீருக்கு, 3 மில்லி வேப்பெண்ணெய் கலந்த கரைசலை, கடைசி அறுவடை வரை தெளித்தால், தண்டு மற்றும் காய் துளைப்பான் புழுக்களை தடுக்கலாம்.
- 28ம் நாள் முதல் பூக்க துவங்கி, 50ம் நாளில், 100 சதவீதம் பூத்து விடும்.புள்ளி வண்டு, சாம்பல் கூன் வண்டுகளை, 1 ஏக்கருக்கு, 12 கிலோ அடுப்பு சாம்பலை மணலோடு கலந்து, இலைகளில் துாவி அழிக்கலாம்.
- மேலும், கத்திரியை தாக்கும் பச்சை தத்துப்பூச்சி, மாவுப்பூச்சியை, 40 மில்லி மீன் அமிலோ அமிலத்தை, 1 லி., தண்ணீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
- நடவுக்கு முன் சூடோமோனஸ், பாஸ்போ பாக்டீரியா ஆகியவற்றை, தொழுவுரத்துடன் கலந்து மண்ணில் போட்டால், வாடல் நோய் வராது.
- முதல் அறுவடையை, 50 – 60 நாட்களில் செய்யலாம்.
- பயிர் சுழற்சி முறையை கடைபிடிப்பதும், மிக அவசியம். ஒருமுறை கத்தரி போட்டு அறுவடை முடிந்த வயலில், அடுத்ததாக வேறு பயிரை நடவு செய்ய வேண்டும்.
நன்றி – பசுமை தமிழகம்
You must log in to post a comment.