கடைகள் திறப்பு; பஸ்கள் ஓடின

பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் திறப்பு; பஸ்கள் ஓடின

428

பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் திறப்பு; பஸ்கள் ஓடின

அரசின் அறிவிப்பை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத்தில் கடைகள் திறக்கப்பட்டன. பஸ்களும் ஓடின.

கொரோனாவை கட்டுப்படுத்த…

தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் மீண்டும் அதிகரித்த நிலையில், அதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 10-ந் தேதி அதிகாலை 4 மணி முதல் நாளை (திங்கட்கிழமை) அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கில் தமிழக அரசால் திறக்க அனுமதிக்கப்பட்டிருந்த மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை திறக்கப்பட்டன. மற்ற கடைகள் திறக்கப்படவில்லை.

கடைகளில் குவிந்த பொதுமக்கள்

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் எந்த கடைகளும் திறக்கப்படவில்லை. ஓட்டல்களில் பார்சல் உணவு விற்பனை செய்யப்பட்டது. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் இயங்கின. அத்தியாவசிய தேவைகளான மருந்து கடைகள், பால் வினியோக கடைகள், மருத்துவமனைகள் இயங்கின. பெட்ரோல்- டீசல் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையைபோல், இந்த ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று நினைத்து, பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்கள் நேற்று மளிகை பொருட்கள், காய்கறிகள் வாங்க குவிந்தனர்.

ஊரடங்கு நீட்டிப்பு

இந்த நிலையில் நேற்று மதியம் தமிழக அரசு திடீரென்று ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் நாளை (திங்கட்கிழமை) முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தது. முழு ஊரடங்கில் மருந்து கடை, நாட்டு மருந்து கடைகளை தவிர மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகளை திறக்க அனுமதி கிடையாது.

முழு ஊரடங்கில் அந்தந்த பகுதிகளுக்கு நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் முழு ஊரடங்கு நாளை முதல் கடைபிடிக்கப்படுவதால் முன்னதாக நேற்று இரவு 9 மணி வரையிலும், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து கடைகளையும் இரவு 9 மணி வரை திறந்து வியாபாரம் செய்யவும், 24 மணி நேரமும் அரசு மற்றும் தனியார் பஸ்களை இயக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை

திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்த அறிவிப்பால் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று குறைவான கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இரவு 9 மணி வரை வியாபாரம் நடைபெற்றது. பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. பெரம்பலூரில் இருந்தும், பெரம்பலூர் வழியாகவும் வெளியூர்களுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று மாலையில் இருந்து இயக்கப்பட்டன.

அதில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. டவுன் பஸ்கள் இன்று இயக்கப்படுகிறது. இன்று அனைத்து கடைகளும் திறக்கப்படும் என்பதால் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்றும், பஸ்களில் கூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குன்னம், வேப்பந்தட்டை

குன்னம், வேப்பூர், புதுவேட்டக்குடி ஆகிய பகுதிகளில் மளிகை கடைகள், பேக்கரி போன்றவை நேற்று மதியம் முதல் திறக்கப்பட்டு செயல்பட்டன. ஆனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது. டீக்கடைகள் திறக்கப்படவில்லை. சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது.

வேப்பந்தட்டை பகுதியில் மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் நேற்று மதியம் திறக்கப்பட்டு, இரவு வரை செயல்பட்டன. மற்ற கடைகள் பூட்டப்பட்டிருந்தன. வேப்பந்தட்டை பகுதி வழியாக மாலை நேரத்தில் ஆத்தூர், சேலம் போன்ற பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டன.

மங்களமேடு, பாடாலூர்

மங்களமேடு பகுதியில் ஒரு சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. சாலைகளில் இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன. மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. பாடாலூர் பகுதியில் காய்கறி, மளிகை உள்ளிட்ட சில கடைகள் மட்டுமே திறந்திருந்தன. ஆனால் ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களே பொருட்கள் வாங்க வந்தனர். சாலைகளில் ஒருசிலர் மட்டுமே சென்று வந்தனர். திருச்சி நெடுஞ்சாலையில் சில பஸ்கள் சென்று வந்தன.

தினத்தந்தி

Our Facebook Page
%d bloggers like this: