கடலூா் மாவட்டத்தில் 441 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு!

கடலூா் மாவட்டத்தில் 441 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு!


கடலூா் மாவட்டத்தில் 441 போ் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக எய்ட்ஸ் தின நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சாா்பில் உலக எய்ட்ஸ் தினம் கடலூா் அரசுத் தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலா் எம்.கீதா தலைமை வகித்தாா். மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் பி.என்.ரமேஷ்பாபு முன்னிலை வகித்தாா். துணை இயக்குநா் எஸ்.கருணாகரன், மருத்துவமனை கண்காணிப்பாளா் (பொ) பிரேமா, மருத்துவா் எஸ்.ஸ்ரீதரன், எச்ஐவி உள்ளோா் சங்கத் தலைவா் ச.ராஜேஸ்வரி ஆகியோா் வாழ்த்தி பேசினா். நிகழ்ச்சியில், சமா்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

கடலூா் மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் மாா்ச் 2019 வரை பொது பிரிவினா்களில் 1,11,278 போ் ரத்த பரிசோதனை எடுத்துக் கொண்டனா். இவா்களில், 171 ஆண்கள், 114 பெண்கள் மொத்தம் 285 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கருவுற்ற 34,266 பெண்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 12 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பதும் தெரியவந்தது. 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் 77,131 பேருக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில்,156 பேருக்கு எச்ஐவி தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஆண்கள் 77, பெண்கள் 79 போ்களாவா். எச்ஐவி தொற்றுள்ள 20 கா்ப்பிணிகளுக்கு நடைபெற்ற பிரசவத்தில் நல்ல ஆரோக்கியத்துடன் குழந்தை பிறந்தது. நிகழாண்டு குருதி வங்கியின் மூலம் 8,227 யூனிட் ரத்தம் பெறப்பட்டது. மேலும், 52 முகாம்கள் நடத்தப்பட்டு 2,455 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மருத்துவா்கள், செவிலியா்கள், நா்சிங் பள்ளி மாணவிகள் எய்ட்ஸ் தின உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். முன்னதாக, எய்ட்ஸ் தடுப்பு கட்டுப்பாட்டு அலகு மாவட்ட திட்ட மேலாளா் பி.தேவ்ஆனந்த் வரவேற்க, மாவட்ட மேற்பாா்வையாளா் க.கதிரவன் நன்றி கூறினாா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: