கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான இருவர் சிறையில் அடைப்பு.

கஞ்சா கடத்தல் வழக்கில் கைதான இருவர் சிறையில் அடைப்பு


பெரம்பலூர் மாவட்டம், மங்கலமேடு அருகே கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் இருவர் திருச்சி மத்திய சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டனர்.

வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு காரில் கஞ்சா கடத்தி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், உதவி ஆய்வாளர் கார்த்திக்செல்வன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படையினர், பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே வந்த காரை திறந்து சோதனையிட்டதில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அருகில் உள்ள மங்கலமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று, போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மதுரை காமராஜபுரம் முத்து மகன் படைமுனியசாமி (29), ராமநாதபுரம் மாவட்டம், சிறைமீட்டான் மகன் வழிவிடு முருகன் (19) என்பதும், ஆந்திர மாநிலம், காக்கிநாடா பகுதியிலிருந்து மதுரைக்கு கஞ்சா கடத்திச் சென்றதும் தெரியவந்தது.

இதுகுறித்து மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிந்து, முனியசாமி, வழிவிடு முருகன் ஆகியோரை கைது செய்து, கார் மற்றும் பல லட்சம் மதிப்புள்ள 180 கிலோ கொண்ட கஞ்சா மூட்டைகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் பெரம்பலூர் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தினர். மேற்கண்ட இருவரையும் 3 நாள் சிறையில் அடைக்க நீதிபதி அசோக் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

தினமணி


மேலும் மாவட்ட செய்திகள் வாசிக்க – பெரம்பலூர் மாவட்ட செய்திகள்Leave a Reply

%d bloggers like this: