ஒகலூரில் தொல் திருமாவளவன் பிரசாரத்துக்கு எதிர்ப்பு.

ஒகலூரில் தொல் திருமாவளவன் பிரசாரத்துக்கு எதிர்ப்பு.


பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகலூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு வாக்கு சேகரிக்கச் சென்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனை ஊருக்குள் வரக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து  ரகளை செய்ததால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகலூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு அவர் வாக்கு சேகரிக்கச் சென்றார்.

அப்போது, ஊருக்கு வெளியே கூடியிருந்த ஒரு பிரிவினர் வாக்குச் சேகரிக்க ஊருக்குள் வரக்கூடாது எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்து அவரை முற்றுகையிட்டனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  தகவலறிந்து வந்த மங்களமேடு சரக துணைக் கண்காணிப்பாளர் தேவராஜன் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பின்னர், பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் தலைமையிலான போலீஸார் அங்கு  குவிக்கப்பட்டனர்.

இதன் பின்னர், ஒரு தரப்பினர் வசிக்கும் பகுதிகளில் மட்டும் பிரசாரம் செய்துவிட்டு செல்ல போலீஸார் அனுமதித்ததைத் தொடர்ந்து, போலீஸார் பாதுகாப்புடன் திருமாவளவன் பிரசாரம் செய்துவிட்டு  அங்கிருந்து சென்றார்.

இதையடுத்து, மீண்டும் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பு ஏற்பட்டது. இதில், கல்வீச்சில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரின் கார் கண்ணாடி உடைந்தது. இதையடுத்து போலீஸார் இரு தரப்பினரையும் கலைந்து போக வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்ததையடுத்து அப்பகுதியில் அமைதி நிலவியது. மேலும், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க ஒகலூர் கிராமத்தில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து விஏஓ ராஜேஸ்வரி அளித்த புகாரின் பேரில், ஒரு தரப்பினர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி

217total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: