AIADMK

பெரம்பலூர் தொகுதியை ஏன் அ.தி.மு.க. இழந்தது?

844

பெரம்பலூர் தொகுதியை ஏன் அ.தி.மு.க. இழந்தது?

தொடர்ந்து இரண்டு முறை வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதியை அ.தி.மு.க. இழக்க நேரிட்ட காரணங்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் கடந்த 2011, 2016-ம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க., தற்போது அந்த தொகுதியை இழந்துள்ளது. இதுகுறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது;-

முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூரில் மேற்கொண்ட தேர்தல் சுற்றுப்பயணத்தின்போது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி வளர்ச்சிக்கு எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. குறிப்பாக 2006-2011-ம் ஆண்டுகளில் திமு.க. ஆட்சிக்கால நிறைவின்போது அடிக்கல் நாட்டப்பட்டு டெண்டர் விடப்பட்டு, பின்னர் சுமார் 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி திட்டம், பாடாலூரில் 100 ஏக்கரில் அரசு ஜவுளி பூங்கா அமைக்கும் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அவர் எந்த அறிவிப்பும் வெளியிடாதது, நீண்டகால எதிர்ப்பார்ப்பில் இருந்த பொதுமக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

உற்சாக குறைவு

பெரம்பலூருக்கு பதிலாக அரியலூருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் 2020-ம் ஆண்டு அங்கு அரசு மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா பெரம்பலூரில் நடந்த தி.மு.க. தேர்தல் பிரசார நிறைவின்போது, அரசு மருத்துவக்கல்லூரியை நிறுவுவோம் என்று உறுதி அளித்தார். இது பொதுமக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அ.தி.மு.க. வேட்பாளர் புதுமுக வேட்பாளராக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க.வினரும், பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற வேட்பாளருக்கே மீண்டும் சீட் வழங்கப்பட்டது. இதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் இடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டது. தற்போது நடந்த தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.க. வேட்பாளர், இதே தொகுதியில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவர் ஆவார். இதனால் அவர் மீது இருந்த அனுதாபம் தற்போதைய தேர்தலில் அவர் அதிக வாக்குகள் பெற ஒரு காரணமாக அமைந்தது.

வாக்கு வங்கி குறைந்தது

இது ஒருபுறம் என்றால், பா.ஜ.க.வுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்ட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வி.களத்தூர், முகமதுபட்டினம், விசுவக்குடி, மேலக்குணங்குடி, தேவையூர், தைக்கால், வாலிகண்டபுரம், குரும்பலூர் பாளையம், தொண்டமாந்துறை, பாத்திமாபுரம், ஈச்சம்பட்டி கிராமங்களை சேர்ந்தவர்கள், அனைத்து கிராமங்களிலும் பரவலாக வசிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.விற்கு தங்களது வாக்குகளை சிதறாமல் பதிவு செய்தனர். மேலும் ம.தி.மு.க., காங்கிரஸ் கட்சி, கம்யூனிஸ்டுகளின் கணிசமான வாக்குகளும் தி.மு.க.வுக்கு கூடுதல் வலுசேர்த்தன. இதனால் இப்பகுதிகளில் அ.தி.முக. வாக்கு வங்கி வெகுவாக குறைந்தது.

பெரம்பலூர் நகரில் ஓரிரு வார்டுகள் தவிர பெரும்பாலான வார்டுகளில் தி.மு.க.வை ஆதரிக்கும் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். வாக்குப்பதிவின்போது பல வார்டுகளில் அ.தி.மு.க. முகவர்கள் அர்ப்பணிப்பு திறனுடன் பணியபுரியவில்லை. அ.தி.மு.க.வினர் தேர்தல் பணியாற்றுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படவில்லை. மேலும் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்கு அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளர்கள் எவரும் பிரசாரத்திற்கு வருகை தரவில்லை. இதுவும் ஒரு காரணமாக அமைந்துள்ளது.

கொள்கை பிடிப்புடன் தி.மு.க.வினர்

பெரம்பலூர் நகரம், பெரம்பலூர் ஒன்றியம், வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஒன்றியங்கள் என அ.தி.மு.க. கோட்டையாக இருந்த கிராம ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் கடந்த இருமுறை அ.தி.மு.க.விற்கு வாய்ப்பு கொடுத்தாகிவிட்டது. இந்த முறை தி.மு.க.விற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று உறுதியுடன் இருந்தது வாக்குப்பதிவின்போது வெளிப்பட்டது. எப்படியாவது இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெற்றே தீரவேண்டும் என்ற கொள்கை பிடிப்புடன், குழுமனப்பான்மையுடன் தி.மு.க.வினர் செயல்பட்டனர். சிறுசிறு தவறுகள், பிழைகள் ஏற்பட்டால் உடனே அந்த பகுதியில் தி.மு.க.வினர் விரைந்து சென்று, தவறுகளை சரிசெய்ததை காணமுடிந்தது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் இளம்வாக்காளர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். கடந்த முறை அ.தி.மு.க.விற்கு அதிகம் பதிவான இளம் வாக்காளர்களின் வாக்குகள் சிதறி இந்த முறை நாம் தமிழர் கட்சிக்கு சென்றது. அதனாலேயே பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 18,673 வாக்குகள் பெறமுடிந்தது. கடந்தமுறை அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று, இந்த முறை அ.ம.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.வின் வாக்குகள் பிரிந்தன. அந்த வாக்குகள் தி.மு.க.விற்கே அதிகம் சென்றன. இது அ.தி.மு.க.விற்கு பெரும் இழப்பாக இருந்தது. இத்தகைய காரணங்களால் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து இருமுறை வெற்றியை தக்கவைத்த அ.தி.மு.க. இந்த முறை வெற்றியை தொடர இயலாமல் போனது, என்று தெரிவித்தனர்.

தினத்தந்தி
%d bloggers like this: