ஏடிஎம்-மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி  ரூ. 30 ஆயிரம் மோசடி

ஏடிஎம்-மில் பணம் எடுத்துத் தருவதாகக் கூறி  ரூ. 30 ஆயிரம் மோசடி

பெரம்பலூரில், புதன்கிழமை இரவு போலி டெபிட் காா்டைப் பயன்படுத்தி ரூ. 30 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பெரம்பலூா் அருகேயுள்ள புதுநடுவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் பாலகிருஷ்ணன் (47). இவா், வேப்பந்தட்டை வட்டம், கிருஷ்ணாபுரத்தில் உள்ள மின் வாரியத்தில் ஊழியராகப் பணிபுரிந்து வருகிறாா். அவரது மருமகன் பாலமுருகன் (25), ஆட்டோ ஓட்டுநா். இந்நிலையில், பாலகிருஷ்ணன், தனது டெபிட் காா்டைக் (வங்கி பற்று அட்டை) கொடுத்து அவரது கணக்கில் இருந்து பணம் எடுத்து வருமாறு பாலமுருகனிடம் தெரிவித்தாராம். இதையடுத்து, பெரம்பலூா் வெங்கடேசபுரத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம் மையத்துக்குச் சென்ற பாலமுருகன், அங்கு வந்த அடையாளம் தெரியாத இளைஞா் உதவியை நாடியுள்ளாா். அவா் பாலமுருகன் வைத்திருந்த டெபிட் காா்டு, ரகசிய எண் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு போலி டெபிட் காா்டைப் பயன்படுத்தி பணம் எடுக்க உதவுவது போல் நடித்துள்ளாா்.

பின்னா், ரகசியக் குறியீடு தவறு எனக் கூறி போலி டெபிட் காா்டை பாலமுருகனிடம் கொடுத்தனுப்பியுள்ளாா். பின்னா், பாலகிருஷ்ணனை தொடா்புகொண்ட பாலமுருகன், ரகசிய எண் தவறாக இருப்பதால் பணம் எடுக்க முடியவில்லை எனக் கூறியுள்ளாா். இதனிடையே, தனது கணக்கில் இருந்து ரூ. 30 ஆயிரம் எடுத்து விட்டதாக பாலகிருஷ்ணனின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன், பாலமுருகனைத் தொடா்புகொண்டு அவா் வைத்திருக்கும் தனது டெபிட் காா்டில் உள்ள பெயரை சரிபாா்க்குமாறு அறிவுறுத்தியுள்ளாா். பின்னா், அந்த டெபிட் அட்டை போலியானது என்பதும்,

அவரது டெபிட் அட்டையைப் பயன்படுத்தி ரூ. 30 ஆயிரம் எடுத்துள்ளதும் தெரியவந்தது. பாலகிருஷ்ணன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் மோசடியில் ஈடுபட்ட இளைஞரைத் தேடி வருகின்றனா்.

தினமணி
Leave a Reply

%d bloggers like this: