பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்கியது.

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 8,656 மாணவ- மாணவிகள் எழுதினர்.

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு எனப்படும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் 37 மையங்களில் தமிழ் முதல் தாள் தேர்வு நேற்று மதியம் நடந்தது. இதையொட்டி மாணவ- மாணவிகள் மதியம் 1 மணியளவில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத்தொடங்கினர். அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட்டிருந்த அறிக்கையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டு தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் 1.30 மணியளவில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பிரார்த்தனையை தொடர்ந்து தேர்வின் போது மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் எடுத்துரைத்தனர். தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் 1.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்றனர். சரியாக மதியம் 2 மணியளவில் வினாத்தாள் கட்டு பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வினி யோகம் செய்யப்பட்டது. 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து விடைத்தாள் வழங்கியதும் அதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பினர். 2.15 மணியளவில் தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.


பெரம்பலூர் மாவட்டத்தில் 4,595 மாணவர்களும், 4,182 மாணவிகளும் என 8,777 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் தமிழ் முதல் தாள் தேர்வில் 8,656 பேர் கலந்து கொண்டு எழுதினர். தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகம் வழிகாட்டுதலின் பேரில் செய்யப்பட்டிருந்தன.


பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்வு மையங்களில் ஆய்வு செய்ய முதன்மை கண்காணிப்பாளர்களாக 37 தலைமை ஆசிரியர்கள் மற்றும் 37 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 6 அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு மையத்திற்கு 11 வழித்தடங்களில் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்து செல்ல 11 வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக 491 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வில் துண்டு சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்- வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க 49 பறக்கும் படையினர் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி வந்து கண்காணித்தனர்.


தினத்தந்தி

21total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: