தஞ்சை பெரியகோவிலில் எல்லை மீறும் காதல் ஜோடிகள்

தஞ்சை பெரியகோவிலில் எல்லை மீறும் காதல் ஜோடிகள்


தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதுடன், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. தமிழகம் மட்டும் அல்லாது, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

உலக பாரம்பரிய சின்னமாக விளங்கும் இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாகத்தான் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு பெருவுடையார், பெரியநாயகி, விநாயகர், வராகி அம்மன், முருகர், தட்சிணாமூர்த்தி, கருவூரார், நடராஜர் சன்னதிகள் உள்ளன.

இந்த கோவிலை சுற்றிலும் திருச்சுற்று மண்டபங்கள் உள்ளன. தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளதையொட்டி திருச்சுற்றுமண்டபங்கள் சமீபத்தில் சீரமைக்கப்பட்டன. மேலும் விமானகோபுரம் உள்ளிட்ட மற்ற கோபுரங்கள், தரைதளம் சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன.

இந்த பெரியகோவிலுக்கு அருகே சிவகங்கை பூங்கா உள்ளது. இந்த பூங்கா காதலர்களின் புகலிடமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் இந்த பூங்காவும் மேம்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணி காரணமாக பூங்கா மூடப்பட்டு விட்டது.

இதனால் பெரியகோவிலுக்கு வரும் காதல்ஜோடிகள் கோவில் வளாகத்தை ஆக்கிரமிக்க தொடங்கி விட்டனர். காலை 9 மணி தொடங்கி இரவில் கோவிலை நடைசாற்றும் நேரம் வரை காதல்ஜோடிகளின் வருகையும் அதிக அளவு உள்ளது. இவ்வாறு கோவிலுக்கு வரும் காதல்ஜோடிகள் சாமி தரிசனம் செய்கிறார்களோ? இல்லையோ? கோவிலில் தெற்கு, மேற்கு மற்றும் வடக்கு திருச்சுற்று மண்டபங்களை ஆக்கிரமித்துக்கொள்கிறார்கள்.

இவர்கள் ஆங்காங்கே தூண்கள் மறைவில் அமர்ந்து கொண்டு எல்லை மீறலில் ஈடுபடுகிறார்கள். இது அங்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்க வைக்கிறது. வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கோவிலுக்கு குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு திருச்சுற்று மண்டபங்களில் உள்ள தெய்வங்கள் மற்றும் லிங்கங்களை தரிசனம் செய்வதற்காக சுற்றி வருகிறார்கள்.

அவ்வாறு வரும் போது காதல்ஜோடிகளில் சிலர் எல்லைமீறலில் ஈடுபடுவது அவர்களை முகம் சுழிக்க வைக்கிறது. சிறுவர், சிறுமிகளை அழைத்து வரும் போது அவர்களை மறைத்துக்கொண்டு செல்லும் நிலைதான் உள்ளது. ஆனால் காதல்ஜோடிகளோ, இதைப்பற்றி கவலைப்படுவது இல்லை.

தஞ்சை பெரியகோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாரும், அதிகாரிகளும் அவ்வப்போது கோவிலில் ரோந்து சுற்றி வருகிறார்கள். ஆனால் அவர்கள் வந்தாலும் அதை காதல்ஜோடிகள் கண்டு கொள்வதில்லை. சில நேரங்களில் எல்லை மீறும் காதல்ஜோடிகளை போலீசார் பிடித்து அறிவுரை கூறி அனுப்புகிறார்கள். சில காதலர்கள் கோவிலுக்குள் செல்லும் போது தனித்தனியே செல்கிறார்கள். பின்னர் அவர்கள் ஒன்று சேர்ந்து விடுகிறார்கள். இருப்பினும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

தினத்தந்தி

தஞ்சை மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: