ஊரடங்கு சமயத்தில் வாரச்சந்தை; சமூக இடைவெளி இல்லாமல் பொதுமக்கள் குவிந்தனர்.
கீழப்புலியூரில் ஊரடங்கை மீறி அமைக்கப்பட்ட வாரச்சந்தையில் பொதுமக்கள் குவிந்ததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டது.
வாரச்சந்தை
மங்களமேட்டை அடுத்துள்ள கீழப்புலியூர் கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வாரச்சந்தை நடைபெற்றது. இதில் நேற்று காலை திடீரென வாரச்சந்தை பஸ் நிலையம் அருகே தொடங்கியது. அங்கு ஏராளமான காய்கறி மற்றும் பழம் விற்பனை செய்யும் கடைகள் வைக்கப்பட்டிருந்தன.
அங்கு கீழப்புலியூர், சிறுகுடல் புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் குவிந்தனர். இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
கொரோனா பரவும் அபாயம்
இது குறித்து தகவல் அறிந்த குன்னம் தாசில்தார் கிருஷ்ணராஜ் உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவாய் ஆய்வாளர் மணிவாசகம், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன், ஊராட்சி செயலாளர் பழனிவேல் மற்றும் வருவாய்த்துறையினர் அனைத்து கடைகளையும் காலி செய்தனர். மேலும் ஊரடங்கு அமலில் உள்ளபோது எப்படி வாரச்சந்தை அமைத்தார்கள் என்று விசாரித்தனர். சமூக அக்கறை இல்லாமல் செயல்படும் சிலரால் பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
தினத்தந்தி
You must log in to post a comment.