உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியமானது.

Hits: 5

உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி அவசியம்.


உடற்பயிற்சி செய்ய எல்லோரும் ஆசைப் படுவோம். ஆனால் அதைத் தினமும் செய்வதற்குத்தான் பெரும் சிக்கலாகத் தோன்றுகிறது. ஆர்வமாக உடற்பயிற்சிக் கூடங்களில் சேருவோர் கூட ஒரு சில தினங்களில் நிறுத்திவிடுகின்றனர். இப்படியெல்லாம் நடக்கும் என்பதாலோ என்னவோ உடற்பயிற்சி கூடங்களும் முன்னதாகவே அதற்கான கட்டணத்தை வசூல் செய்துவிடுகிறார்கள். பணம் போனதுதான் மிச்சம். திரும்பவும் பழையபடியான தூக்கம், பொழுதைப் போக்கத் தொலைக்காட்சி இப்படியாகப் பலர். இன்னும் சிலருக்கு உடற்பயிற்சி பற்றி நினைக்கவே நேரமிருப்பதில்லை. வேலை, வேலை, வேலை என்ற அழைக்கிறார்கள். அந்த வேலையும் உடல் உழைப்பா என்றால் ம்ஹும் இல்லவே இல்லை.. சுமார் 8லிருந்து 10 மணி நேரம் உட்கார்ந்து கொண்டு அலுவலகத்தில், அங்கேயும் முடியவில்லை என்றால் வீட்டிலும் வேலை செய்வதென்ற காலத்தைக் கடத்துகிறார்கள்.

உடலை வருத்த வேண்டுமா?

மூச்சு வாங்க மூச்சு வாங்க ஓட வேண்டும், அதிகமான எடையுள்ளவற்றை ஒரு கையாலும் இரண்டு கையாலும் மாற்றித் தூக்கி இறக்கிச் செய்வது மட்டும் தான் உடற்பயிற்சி என்ற நினைப்பைத் தவிர்க்கவேண்டும். அதற்காக இதைத் தவறென்று சொல்ல வரவில்லை. ஆனால் ஆரம்பத்திலே இது மாதிரியான செயல்களால் உடலில் ஏற்படும் வலி மற்றும் சோர்வு நம்மை அதைத் தொடரச் செய்ய விடுவதில்லை.

பயிற்சி என்றால் என்ன?

முதலில் ஆரம்பிக்க வேண்டும், பிறகு அதைப் பழக்கப் படுத்த வேண்டும், பிறகு விடாது தொடர்ச்சியாகச் செய்ய வேண்டும். இது எல்லாப்பயிற்சிக்கும் பொருத்தமானது தான். அதே போலத்தான் உடற்பயிற்சியும் இருக்க வேண்டும். முதல் நாளே உடலை மாய்த்துக் கொள்வதும், கணக்கில்லாமல் நடப்பதும், இதனால் கால் வீங்கி படுத்துக் கொள்பவர்கள் ஏராளமானோர். அதில் நீங்களும் ஒரு ஆளாகக்கூட இருந்திருக்கலாம்.

ஆசையோடு உடற்பயிற்சி செய்யுங்கள்.

நம் உடலுக்காக, ஆரோக்கியத்திற்காக, சுறுசுறுப்பிற்காக, சீரான ஜீரணத்திற்காக இப்படி எதுவெல்லாம் உங்களுக்கு நினைக்கத் தோன்றுகிறதோ அத்தனையும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்போது ஆரம்பியுங்கள் அதில் ஒரு ஆர்வம் வரும். அந்த சரியான ஆர்வத்திற்குத் தீனி போடுங்கள்.

எளிமையான பயிற்சி.

இதில் நான் இதை இதைச் செய் என்று சொல்லப் போவதில்லை. கைகால்களை முறையாகவும் தொடர்ச்சியாகவும் அசைப்பதிலிருந்து கைவீசி நடப்பது கூட ஒரு வகையான உடற்பயிற்சிதான். காலையில் சிறிது நேரம், மாலையில் சிறிது நேரம் கைகளை உயர்த்தியும் இறக்கியும், குனிந்தும் நிமிர்ந்தும், உட்கார்ந்தும் எழுந்தும், நடந்தும் பாருங்கள் மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள். இதற்குப் பிரத்தியேக அறிவுரைத் தேவையில்லை.  இன்னும் ஒரு படி மேல் சொல்ல வேண்டுமானால் தினமும் 50 தோப்புக்கரணம் போடுவது கூட நல்ல உடற்பயிற்சிதான். வயதானவர்கள் முதல் நாளே 50 தோப்புக்கரணத்திற்கு முயற்சி செய்யாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக் கொள்ளுங்கள். வெளியில் நல்ல நடை இருக்க வேண்டும். தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் பைக், கார் என்ற பயன்பாடுகளே நம்மை நடக்க விடாமல் செய்துவிடுகிறது. அவசரமும் நேரமும் நடக்க விடாமல் தடுக்கிறது. ஆகையால் தனி சிரத்தை எடுத்து நாம் கண்டிப்பாகக் காலையிலும் மாலையிலும் அரை மணிநேரம் நடக்க முயற்சி செய்ய வேண்டும்.

நான் முன்னே சொன்னதுதான். நம் ஆரோக்கியத்திற்காக இதைச் செய்கிறோம் என்று எண்ணித் துவங்குங்கள். உடல் மாற்றத்துடன் மனதிலும் நல்ல மாற்றம் வரும், ஆரோக்கியம் நம் வாழ்வில் கூடும். அற்புதங்கள் உங்கள் வாழ்வில் நிகழும் என்பதில் மாற்றமே இல்லை. அப்போ நாளைக்கே நடக்க ஆரம்பித்து விடுங்கள்.
Leave a Reply

%d bloggers like this: