நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்த பெண்கள்.
தமிழக முதல்வரின் உத்தரவை தொடர்ந்து பெரம்பலூரில் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்தனர்.
இலவச பயணம்
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் சாதாரண கட்டண நகர (டவுன்) அரசு பஸ்களில் அனைத்து மகளிரும் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்றார்.
அப்போது அனைத்து பெண்களும் நேற்று முதல் சாதாரண கட்டண நகர பஸ்களில் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்பது உள்ளிட்ட 5 முக்கிய கோப்புகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார். இதையடுத்து சாதாரண கட்டண நகர பஸ்களில் அனைத்து பெண்களும் கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம்
இதைத்தொடர்ந்து பெரம்பலூரில், அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு டவுன் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் நேற்று முன்தினம் இரவே மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
பெரம்பலூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மொத்தம் 30 அரசு டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று அந்த பஸ்களில் இலவசமாக பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
தனியார் பஸ்களில் கூட்டம் குறைவு
இலவசமாக பயணம் செய்யலாம் என்பதால் அரசு டவுன் பஸ்களில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் தனியார் பஸ்களில் பெண்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
தினத்தந்தி
You must log in to post a comment.