ஆத்து நோன்பு

ஆத்து நோன்பு (சிறுகதை)

557

ஆத்து நோன்பு (சிறுகதை)

இந்த வருடம் பெரிய மழையில்லை, ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடவில்லை. பாலத்து வழியாக செல்லும் போதெல்லாம் அய்யாஸ் கேட்பான் ‘அத்தா எப்ப ஆத்து நோன்பு வரும்’, ‘அதுவா நாம நோன்பு வச்சிட்டு வரம்ல அது முடிஞ்ச உடனே வரும்’. அய்யாஸ் ஒன்றும் பேசவில்லை. ஏதோ யோசித்துக்கிட்டே வந்தான். பெரியவர்களுக்கு ரம்ஜான், பக்ரீத் எப்படியோ அதுபோல் குழந்தைகளுக்கு அதற்கு மறுநாள் நடக்கும் ஆத்து நோன்பு. ரம்ஜான் முடிவதற்குள்ளாகவே பத்து முறையாவது  ஆத்து நோன்பு பற்றி கேட்டிருப்பான் அய்யாஸ். ‘நோன்பு அன்னிக்கி ஆத்துல தண்ணி வந்தா என்ன பண்றது. பலூன் கடை வரும்ல’. இப்படி நிறைய கேள்விகள். எல்லாவற்றிக்கும் அத்தா முபாரக் தலையாட்டிக்கொண்டே வந்தான்.

ரம்ஜான் முப்பது நோன்பு முடிந்தது. பெருநாள் தொழுகை முடித்துவிட்டு எல்லோரும் பள்ளிவாசலை விட்டு வெளியே வந்து கொண்டிருந்தனர். வழிநெடுகிலும் ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக்கொண்டு  வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். வீட்டிற்கு வெளியே நின்ற அய்யாஸின் முகத்தில் மட்டும் சோகக்கலை தாண்டவமாடியது. ‘அய்யாஸ் ஏண்டா மூஞ்சிய உம்முனு வச்சிருக்க’. ‘போத்தா ஆத்து நோன்புக்கு போலான்னு சொல்லிட்டு நீ பிரண்டோட அரட்ட அடிச்சிட்டுருக்க’ அவனது கண்களில் நீர் கோர்த்திருந்தது. ‘ஆத்து நோன்பு நாளைக்குதாண்டா இப்ப போய் விளையாடு. நோன்பு நாலு அதுமா அழக்கூடாது’ முபாரக் சமாதானம் செய்தான்.

அய்யாஸின் அழுகை சற்று அடங்கியது. ஆத்து நோன்புக்கு போக வேண்டும் அவனின் நீண்ட நாள் ஏக்கம் நிறைவேற போகிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், அவனது ஜோப்பு நிறைய உறவினர்கள் கொடுத்த நோன்பு காசு நிறைந்திருக்கிறது. அதுவே அவனை ஓரளவு தேற்றியது. தனது நண்பர்களிடம் நோன்பு காசை எடுத்துக்காட்டி ‘பாத்தியா எவ்ளோ காசுன்னு பெருமையடித்துக்கொண்டான். அம்மா சாலிஹா கூப்பிட்டாள் ‘அவ்ளோ காசு வச்சிருக்க என்ட கொடு சேத்து வைக்கலாம்’ என்றாள். ‘போம்மா ஆத்து நோன்புக்கு வேணும்ல’ என்று சொல்லிவிட்டு வெளியே ஓடிவிட்டான்.

ரம்ஜான் பெருநாள் மதியம் நல்ல பிரியாணியை வெளுத்துவிட்டு மாலை நேரத்தில் நண்பர்களுடன் பேசிவிட்டு எல்லோரும் உறங்க சென்றார்கள். ‘அய்யாஸ் வந்து படு’ என்று முபாரக் சொல்லிவிட்டு அன்று அலைந்த அலைச்சலால் நன்கு தூங்கிவிட்டான் முபாரக். சாலிஹாவும் எல்லா பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு, வீட்டை ஒதுங்கவைத்துவிட்டு தூங்க சென்றுவிட்டாள். அய்யாஸ் மட்டும் உறங்கவில்லை. ஆத்து நோன்பு பற்றிய சிந்தனையிலேயே இருந்தான். அவன் ஜோப்பில் இருந்த பணத்தை கெட்டியாக பிடித்திருக்க அவன் மறக்கவில்லை. அவன் எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. ஆனால் விடிந்ததும் முதல் ஆளாக எழுந்துகொண்டான்.

‘நீ எப்படா முழிச்ச’, ‘நான் முன்னேயே முழிச்சிட்டேன். நீ உன் பிரண்ட் கூட எங்காவது சுத்த போய்ட்டா நான் யார்கூட ஆத்து நோன்புக்கு போறது’ அய்யாஸ் கிடுக்கிப்பிடி போட, நான் பிரண்ட் கூட டூர் போறது சாலிஹா சொல்லிருப்பாளோ முபாரக்கின் மைண்டில் ஓடியது. முதல் ஆளாக குளித்து முடித்துவிட்டு புது டிரஸ் போட்டுக்கொண்டான் அய்யாஸ். கூடவே தனக்கு கிடைத்த நோன்பு காசையும் பொக்கிசம்போல் எடுத்து சட்டைப் பாக்கட்டில் வைத்துக் கொண்டான்.

‘போலாமாத்தா’, ‘எங்கடா’, ‘ஆத்து நோன்புக்குத்தான்’, ‘டேய் அது சாயங்காலம் தாண்டா போய் சாப்பிடு முதல்ல’ அதட்டினான் முபாரக். அய்யாஸ் சாப்பிட்டுவிட்டு வீட்டு திண்ணையில் உட்கார்ந்துகொண்டு தனது நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தான். ‘நாங்கல்லாம் ஆத்து நோன்புக்கு போறோமே, எங்கத்தா அழைச்சிட்டு போறேன்னு சொன்னாரு’. ‘நாங்களுந்தான் போறோம்’ என்றனர் அவனது நண்பர்கள் கோரஸாக. ஒருவழியாக சாயங்காலம் ஆனது. ‘போலாமாடா’ முபாரக் கேட்கும் முன்பே வீட்டிற்கு வெளியே தயாராக நின்றுகொண்டிருந்தான் அய்யாஸ்.

இருவரும் கைய பிடித்துக்கொண்டு நடந்து சென்றனர். ஆத்து நோன்பு விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆறு முழுவதும் மனித தலைகள்தான். பெரியவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என எல்லோரும் ஒன்றுகூடி மகிழும் நாளாக ஆத்து நோன்பு திகழ்ந்தது. பலரும் தனது நண்பர்களுடன் வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதை பேசிக்கொண்டிருந்தனர். நீண்டு செல்லும் ஆறு, இருபுறமும் அழகிய செடி கொடிகள், ஆற்றின் ஓரத்தில் நெளிந்துகொண்டு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீர், இதமான காற்று என மனதிற்கு ரம்மியமான சூழல் அங்கு நிலவியது.

சைக்கிளில் ஐஸ் விற்கும் நபர்கள் எழுப்பும் ஹாரன் ஓசை எல்லா திசைகளிலும் எதிரொலித்தது. விதவிதமான கடைகள் வந்திருந்தன. பலூன் கடைகளை சுற்றி குழந்தைகள் பலூன் வாங்குவதற்கு முண்டியடித்தனர். இந்த வருடம் மீன் பலூன், பூனை பலூன், மான் பலூன் என விதவிதமாக இருந்ததால் அது குழந்தைகளை கவர்ந்தது. அந்த உருவம் பொறித்த பலூன்களை வாங்க குழந்தைகள் போட்டியிட்டனர். பானிபூரி கடைக்கு சென்று ஒரு பிளேட் பானிபூரி வாங்கி வந்து சாப்பிட அமர்ந்தான் முபாரக்.

‘இத ஏந்தா வாங்குனே, எனக்கு ஐஸ் வாங்கிக்கொடு’ அடம்பிடித்தான் அய்யாஸ். அவனது பட்டியல் நீண்டுகொண்டே சென்றது. ஒவ்வொன்றையும் வாங்கி தந்தான் முபாரக். மீன் உருவ பலூன், ஒலி எழுப்பும் துப்பாக்கி, ஒயர்லெஸ் கார், பெரிய பொம்மை அய்யாஸின் கை நிறைய விளையாட்டு சாமான்கள். மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றான் அய்யாஸ். ஏதோ சாதனை செய்ததை போல எல்லா விளையாட்டு சாமான்களையும் தானே தூக்கிக்கிட்டு நடந்தான். கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கலைய தொடங்கியது. மஃக்ரிப் தொழுகைக்கான பாங்கோசை எழும்பியது. இருட்டிவிட்டது. மழைத்துளி ஒவ்வொன்றாக விழத்தொடங்கியது.

முபாரக்கும், அய்யாசும் வெற்றிக்கு விரைந்து சென்றனர். ‘எல்லா காசையும் காலி பண்ணியாச்சா’ ஸாலிஹா அதட்டினாள். எல்லா சாமானையும் கீழே வைத்துவிட்டு அம்மாவின் மடியில் படுத்துக்கொண்டான். ஆத்து நோன்பை பார்த்த மகிழ்ச்சியை கண்கள் விரிய, புன்னகை தளும்ப சொல்லிக்கொண்டே போனான் அய்யாஸ். சாலிஹா அய்யாஸின் தலையை வருடிக்கொண்டிருந்தாள்.

– வி. களத்தூர் பாரூக்

எமது பேஸ்புக் பக்கம்

போதை மருந்து ஒரு புற்றுநோய்
%d bloggers like this: