ஆண்டிமடம் அருகே திருமணம் தடைப்பட்ட விரக்தியில் மணமகன் தற்கொலை.

ஆண்டிமடம் அருகே திருமணம் தடைப்பட்ட விரக்தியில் மணமகன் தற்கொலை.

ஆண்டிமடம் அருகே சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட விரக்தியில் மணமகன் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே கவரப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 26). இவர் ஓசூரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்துவந்தார். இவரது தந்தை ஆராவமுதன் ஏற்கனவே இறந்துவிட்டார். தாய் வனஜா மட்டும் உள்ளார். இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சீனிவாசனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு பெண்ணை உறவினர்கள் நிச்சயம் செய்திருந்தனர். இதையடுத்து திருமணத்துக்காக பத்திரிகை அச்சடித்து உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டது. மேலும் திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. இந்த திருமணம் நேற்று காலை நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில் பெண்ணின் உறவினர் ஒருவர் 18 வயது நிறைவடையாத சிறுமியை திருமணம் செய்து கொடுக்கப் போவதாக குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி சம்பந்தப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பெண்ணிற்கு 18 வயது பூர்த்தி ஆகவில்லை என்பதை உறுதிசெய்தனர். பின்னர் சிறுமியை மீட்டு பெண்கள் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்திருந்தனர். இதனால் சீனிவாசன் வீட்டில் திருமண வேலைகள் நின்றுபோனது. மேலும் சீனிவாசன் குறிப்பிட்ட நாளில் தனக்கு திருமணம் நடைபெறாது என்ற மன உளைச்சலில் இருந்து வந்தார். நேற்று காலை சீனிவாசன் வீட்டில் இல்லாததை கண்டு அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை. அப்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றின் ஓரத்தில் அவரது செல்போன் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கிணற்றில் இறங்கி பார்த்தபோது சீனிவாசன் கிணற்றுக்குள் பிணமாக கிடந்தார்.
உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து உறவினர்கள் தெரிவிக்கையில், நேற்று காலை ஆண்டிமடம் சிவன் கோவிலில் நடைபெற இருந்த திருமணம் நின்றுபோனதே, என்ற விரக்தியில் இருந்த சீனிவாசன் அதே நேரத்தில் வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியாக உள்ளது, என்று கூறினர்.
இந்த சம்பவம் கவரப்பாளையம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: