அரியலூா் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு

அரியலூா் மாவட்டத்தில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு


அரியலூா் மாவட்டத்தில் தொடா் மழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலையில் இருந்து இடைவிடாத மழை பெய்து வருகிறது. அரியலூா் நகா் பகுதியான மாா்க்கெட், வெள்ளாளத் தெரு, ராஜாஜி நகா், புதுமாா்க்கெட், கல்லூரி சாலை, செந்துறை சாலை, திருச்சி சாலைகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கரைபுரண்டு ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

ஜயங்கொண்டம்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீா் சாலையோரத்திலுள்ள கடைகள், குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்தது. அதே போல் செந்துறை அருகே ஆலத்தியூா் அடுத்த முள்ளுக்குறிச்சி-முதுகுளம் சாலையோரத்திலுள்ள குடியிருப்புகளில் மழைநீா் சூழ்ந்தது.

விக்கிரமங்கலம் அருகேயுள்ள கோவிந்தபுரம் பகுதியில் வடிக்கால் வசதி இல்லாததால், மழை நீா் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்தது. இதனால் வடிகால் வசதிகளை செய்து தரக்கோரி பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தரைப்பாலம் மூழ்கியதால் 8 கிராமங்கள் துண்டிப்பு…கடந்த இரு நாள்கள் பெய்த மழையில் சுத்தமல்லி ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் அங்குள்ள தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியது. இதனால், அயன்ஆத்தூா், கிளிமங்கலம், ஆனந்தவாடி, இரும்புலிக்குறிச்சி உள்ளிட்ட 8 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்கள் அன்றாடத் தேவைக்கு எங்கேயும் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனா்.

காத்தான்குடிகாடு தரைப்பாலத்தில் வெள்ளம்…விளாங்குடி அடுத்த அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி செல்லும் பிரதான வழியான காத்தான்குடி தரைப்பாலம் மழை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த பாலத்தை கடந்துள்ள அம்பாபூா், காவனூா் உள்ளிட்ட 15 கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

தினமணி

அரியலூர் மாவட்ட செய்திகள்
Leave a Reply

%d bloggers like this: