அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான 87 வாக்குச்சாவடிகள்.

அரியலூர் மாவட்டத்தில் பதற்றமான 87 வாக்குச்சாவடிகள்: கலெக்டர் விஜயலட்சுமி தகவல்.


அரியலூர் மாவட்டத்தில் 87 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள உதவி தேர்தல் அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஜயலட்சுமி தலைமை தாங்கினார். சிதம்பரம் உதவி கலெக்டர் விசுமாஜன் முன்னிலை வகித்தார்.


கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-


மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளருக்கு நேரே அவரது புகைப்படம் இடம் பெற்றிருக்கும் என தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் அரியலூர், ஜெயங்கொண்டம், குன்னம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, சிதம்பரம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 587 வாக்குச்சாவடிகளில், 87 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள், 3 வாக்குச்சவாடிகள் நெருக்கடியான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளது.


தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பான புகார்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 04329-228605, 04329-228606, 04329-228607 என்ற தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு, விசாரணைகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.


வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலிலுள்ள தங்களது விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1950 மூலமாக சரிபார்த்துக்கொள்ளலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க அரியலூர் மாவட்டத்தில் 6 பறக்கும் படைக்குழுக்கள், 6 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 4 வீடியோ கண்காணிப்புக்குழுக்கள், 2 வீடியோ பார்வைக்குழுக்கள், 2 கணக்கு குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என்று அவர் பேசினார்.


இதில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்) ஜோதி (உடையார்பாளையம்), மாவட்ட வழங்கல் அதிகாரி (பொறுப்பு) மஞ்சுளா, மாவட்ட வழங்கல் அலுவலர் (புவனகிரி) வெற்றிவேல், உதவி ஆணையர் (கலால்) (காட்டுமன்னார்கோவில்) விஜயராகவன், தாசில்தர்கள், உதவி தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.


தினத்தந்தி

32total visits,1visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: