விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர்.

Hits: 0

விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறை மீறினால் தண்டனை-அபராதம்: அரியலூர் மாவட்ட ஆட்சியர். அரியலூர் மாவட்டத்தில் விளம்பர பதாகை வைப்பதில் விதிமுறைகளை மீறினால் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் விஜயலட்சுமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அரியலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் விளம்பர பதாகைகள், கொடி கம்பங்கள் வைப்பது தொடர்பான அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அச்சக உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி பேசியதாவது:-

உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் போலீசாரின் முன் அனுமதி பெறாமல் விளம்பர பதாகைகள் சாலை ஓரங்களிலோ, தனியார் இடத்திலோ வைக்கக்கூடாது. பதாகைகள் வைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே படிவம் ஒன்று சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய தொகை செலுத்தப்பட்ட ரசீதுடன் சமர்ப்பிக்கப்பட்டு என்னுடைய (கலெக்டரின்) அனுமதி பெற வேண்டும். கல்வி நிறுவனம், வழிபாட்டு தலம், சாலை ஓரம், சந்திப்பு, சிலைகள் மற்றும் சுற்றுலா தலங்கள் அருகில் 100 மீட்டருக்கு அப்பாற்பட்டுதான் விளம்பர பதாகைகள் வைக்கப்பட வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் அனைத்து விதிகளையும் பின்பற்றப்பட வேண்டும். பொதுமக்கள் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விதிகளை மீறுபவர்கள் மீது ஒரு ஆண்டு நீதிமன்ற மூலம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பதாகையின் அடியில் அனுமதி எண், நாள், எத்தனை நாட்களுக்கு செல்லத்தக்கது என்ற விவரம் அச்சிடப்பட வேண்டும். பதாகை வைக்க அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்தவுடன் விண்ணப்பதாரரே யாருக்கும் அச்சுறுத்தல் விபத்து ஏற்படாத வண்ணம் அப்புறப்படுத்தப்பட வேண்டும். அனுமதி பெற்ற பதாகைகளின் எண்ணிக்கை குறித்த விவரமும் அச்சடிக்கப்பட வேண்டும். மீறினால் அச்சக உரிமம் ரத்து செய்யப்படுதல் மற்றும் அச்சகத்தை மூடுதல் ஆகியவை உள்ளிட்ட கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் பேசினார்.

ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிதாபானு, கோட்டாட்சியர்கள் சத்தியநாராயணன் (அரியலூர்), ஜோதி (உடையார்பாளையம்), உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, அலுவலக மேலாளர் (குற்றவியல்) கண்ணன், தாசில்தர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினத்தந்திLeave a Reply