அதிக மகசூல் தரும் 14 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்

அதிக மகசூல் தரும் 14 புதிய பயிர் ரகங்கள் அறிமுகம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் அதிக மகசூல் தரக் கூடிய 14 புதிய பயிர் ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைப் பல்கலைக்கழகம் பல்வேறு பயிர்களில் அதிக மகசூல் தரக் கூடிய புதிய ரகங்களை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தினால் விவசாயிகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட 14 புதிய பயிர் ரகங்களை வெளியிட மாநில பயிர் ரகங்கள் வெளியீட்டுக் குழு ஜனவரி 7-ஆம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.

அதன்படி நெற்பயிரில் ஏடிடீ 53, விஜிடி 1, சாமை ஏடிஎல் 1, பாசிப் பயறு விபிஎன் 4, நிலக்கடலை பிஎஸ்ஆர் 2, ஆமணக்கு ஒய்.டி.பி.1, மரப் பயிரில் கடம்பு எம்டிபி 1, சுரைக்காய் பிஎல்ஆர் 2, பூண்டு உதகை-2, நட்சத்திர மல்லிகை கோ 1, உருளைக் கிழங்கு குப்ரி சஹ்யாத்ரி, வாழையில் காவிரி கல்கி, காவிரி சபா, காவிரி சுகந்தம் ஆகிய ரகங்கள் விவசாயிகளுக்கு பொங்கல் பரிசாக வெளியிடப்பட்டுள்ளன.

புதிய பயிர் ரகங்கள் தொடர்பான விவரங்கள்:

நெல் ஏடிடீ 53:இந்த ரகம் 105 நாள்கள் வயதுடையது. இது, குறுவை, கோடை, நவரை பருவங்களுக்கு உகந்தது. மேலும், சராசரி மகசூலாக ஹெக்டேருக்கு 6,340 கிலோ தரக்கூடியது. நடுத்தர சன்ன அரிசி, அதிக அரவைத் திறன் கொண்டது. குலைநோய், இலை உறை அழுகல், தண்டு துளைப்பான், இலைமடக்குப் புழுவுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது.

நெல் விஜிடி 1:நடுத்தர உயரம், 130 நாள்கள் வயதுடைய சம்பா ரகம். சீரகச் சம்பா ரகத்தைபோல இந்த ரகத்தில் சமையல் பண்புகள் மற்றும் சுவைப் பண்புகள் இருக்கும். சாதம் மிருதுவாகவும், மிதமான வாசனையுடனும், உதிரியாகவும் இருக்கும். ஹெக்டேருக்கு 5,850 கிலோ விளைச்சல் தரக்கூடியது.

சாமை ஏடிஎல் 1: தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் சாகுபடி செய்ய ஏற்றது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. அடர்த்தியான பெரிய கதிர்கள் கொண்டது. இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஏற்றது. அதிக அரவைத் திறன் கொண்ட சத்தான தானியம். ஹெக்டேருக்கு மானாவாரியில் 1,590 கிலோ விளைச்சல் தரக்கூடியது.

பாசிப் பயறு விபிஎன் 4: நீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் பயிரிட ஏற்றது. மஞ்சள் தேமல் மற்றும் சாம்பல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. 65 முதல் 75 நாள்களில் ஹெக்டேருக்கு 1,025 கிலோ விளைச்சல் தரக்கூடியது.

நிலக்கடலை பிஎஸ்ஆர் 2: தமிழகத்தில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படும் அனைத்து மாவட்டங்களிலும் மானாவாரி மற்றும் இறவையில் இந்த ரகத்தை பயிரிடலாம். வயது 110 நாள்கள் ஆகும். சராசரி மகசூலாக மானாவாரியில் ஹெக்டேருக்கு 2,220 கிலோவும், இறவையில் ஹெக்டேருக்கு 2360 கிலோவும் தரக் கூடியது. இது கொத்து வகையை சார்ந்தது. சுமார் 70.2 சதவீதம் பருப்பு உடைப்புத் திறன், 46.51 விழுக்காடு எண்ணெய்ச் சத்து கொண்டது.

ஆமணக்கு ஒய்.டி.பி.1: தமிழகத்தின் அனை த்து மாவட்டங்களிலும் ஆமணக்கு ஒய்.டி.பி.1 ரகம் ஓராண்டு மற்றும் பல்லாண்டு பயிராக பயிரிட ஏற்றது. செடிக்கு ஆண்டுக்கு 3 கிலோ விதை மகசூல் கிடைக்கக்கூடியது, அதிக கிளைப்புத் தன்மை, பருத்த விதைகளைக் கொண்டது, வாடல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டது. ஹெக்டேருக்கு 1,460 கிலோ விளைச்சல் தரக்கூடியது.

சுரைக்காய்  பி எல் ஆர் 2: இந்த ரகம் ஒரு ஹெக்டேருக்கு 42 டன் மகசூல் தரக்கூடியது. நமது பாரம்பரிய குண்டு சுரை போலவும், அதே சமயத்தில் குறைந்த அளவு கழுத்தினையும் கொண்டுள்ளது. காய்கள் இளம் பச்சை நிறத்தில் 50 முதல் 55 நாள்களில் அறுவடைக்குத் தயாராகும். இதனைப் பயிரிட பந்தல் அமைப்பு எதுவும் தேவையில்லை.

பூண்டு உதகை 2: நீலகிரி, திண்டுக்கல் மாவட்டம் கொ டைக்கானல் மலைப் பகுதி, ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பிரதேசப் பகுதிகளுக்கு ஏற்றது. 123 நாள்களில் ஒரு ஹெக்டேருக்கு 17 டன்கள் விளைச்சல் தரக்கூடியது. குமிழ்கள் மிதமான முட்டை வடிவில் பளபளப்பு இளஞ்சிவப்பு நிறத்துடன் இருக்கும். அதிக அளவு அல்லிசின் (கிராம் ஒன்றுக்கு 3.87 மைக்ரோகிராம்) கொண்டது.

நட்சத்திர மல்லிகை கோ1: ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது. மற்ற மல்லிகை வகைகள் சந்தையில் கிடைக்காத பருவங்களில் (நவம்பர் – பிப்ரவரி) இந்த மலர்கள் கிடைக்கப் பெறும். அழகிய பெரிய மொட்டுகள், மிதமான நறுமணம் கொண்டவை. மலர் மொட்டுகள் அதிக நேரம் விரியாமல் இருக்கும் (அறை வெப்ப நிலையில் 12 மணி நேரம், குளிரூட்டப்பட்ட அறையில் 60 மணி நேரம்). நீண்ட மலர் காம்புள்ள இது பறிப்பதற்கும், மலர்ச்சரம் தொடுப்பதற்கும் ஏற்றதாக உள்ளது.

கடம்பு எம்டிபி 1: தமிழகம் முழுவதும் பயிரிட ஏற்றது. குறுகிய கால மரப் பயிர். மரக்கூழ் (44 சதவீதம்) பயன்பாட்டிற்கு 3 ஆண்டுகளிலும், ஒட்டுப் பலகை, தீக்குச்சிப் பயன்பாட்டிற்கு 5 ஆண்டுகளிலும் பலன் தரும். ஹெக்டேருக்கு 135 முதல் 175 டன்கள் விளைச்சல் தரக்கூடியது.

உருளைக்கிழங்கு குப்ரி சஹ்யாத்ரி: இந்த ரகமானது வசந்த, கோடை, கார் காலங்களில் நீலகிரி மலைப் பகுதியில் பயிரிட ஏற்றது. இலைக் கருகல், முட்டைக்கூட்டு நூற்புழுவிற்கு அதிக எதிர்ப்பு சக்தியைக் கொண்டது. அதிக மகசூல் (ஹெக்டேருக்கு 28-35 டன்) தரும் புதிய ரகம் ஆகும். கிழங்குகள் நல்ல சேமிப்புத் திறனையும் கொண்டவை.

வாழை காவிரி கல்கி: ஹெக்டேருக்கு 50-60 டன் விளைச்சல் தரக் கூடியது. குட்டையான இந்த ரகம் குறுகிய காலப் பயிராகும், கற்பூரவல்லி ரகத்தைப் போன்றே அதிக அளவு இனிப்புத் தன்மை கொண்டது. வருடாந்திர பயிர் சாகுபடி மற்றும் அடர்நடவு முறைக்கும் ஏற்றது. மரத்தின் உயரம் குறைவாக இருப்பதால், குலை தள்ளும் பருவத்தில் முட்டு கொடுக்க வேண்டிய தேவையில்லை.

காவிரி சபா : குறுகிய கால பயிரான காவிரி சபா வாழை ரகத்தை கனியாகவும், சமையலுக்கும் பயன்படுத்தலாம்.

வாடல் நோயைத் தாங்கி, களர் உவர் மண் பகுதிகளிலும் வளரும் தன்மை கொண்டது. காய்கள் 7 முதல் 8 நாள்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும். ஹெக்டேருக்கு 58 முதல் 60 டன் விளைச்சல் தரக்கூடியது.

வாழை காவிரி சுகந்தம்: கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குறிப்பாக நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் பயிரிட உகந்தது.

ஹெக்டேருக்கு 50 டன் விளைச்சல் தரக்கூடியது. காய்கள் அடர்பச்சை நிறத்துடனும், கனிகள் பசுமை கலந்த மஞ்சள் நிறத்துடனும் இருக்கும்.

கனிகள் வாசனையுடன் கூடிய இனிப்பு சுவையுடனும் இருக்கும். வாடல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் கொண்டதாகும்.

8total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: