பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமான மல்லிகை சாகுபடியால் மல்லிகை பூவின் விற்பனை படுஜோர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகமான மல்லிகை உற்பத்தியால் மல்லிகை பூவின் விற்பனை படுஜோர்.


பெரம்பலூர் நகருக்கு வரத்து அதிகரிப்பால் மல்லிகை பூக்களின் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது.  மலர்களில்  மங்கையர் பெரிதும் விரும்புவது  மல்லிகை பூக்களை தான். அசலுக்கு போட்டியாக  நகல்கள் வருவதுபோல், மல்லிகை பூக்களுக்கு போட்டியாக முல்லைப்பூ,  ஜாதிமல்லி, காக்கட்டான் பூ, நந்தியாவட்டை என வெள்ளை நிற பூக்களின் ஆதிக்கம்  அதிகரித்தாலும் மணக்கும்  மல்லிகை பூக்களுக்கு ஈடாக வேறெந்த பூக்களையும்  சொல்ல முடியாது.

இந்த மாவட்டத்தில் நொச்சியம், விளாமுத்தூர்,  தம்பிரான்பட்டி, சத்திரமனை, ரங்கநாதபுரம், அரசலூர், அன்னமங்கலம்,  கோனேரிபாளையம், பெரியவடகரை, தொண்டமாந்துறை, கோரையாறு, விசுவக்குடி, செங்குணம், ஆலம்பாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சிறு சிறு விவசாயிகளால்  சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.


இதனால் பெரம்பலூர் நகருக்கான  மல்லிகை பூக்களின் தேவை போதுமானதாகவே உள்ளது. இருந்தும் திருவிழா மற்றும்  திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் அதிகமாக நடக்கும்  மாதங்களில் மல்லிகை  பூக்களின் தேவை அதிகரிக்கும். இதுபோன்ற நேரங்களில் திருச்சி, சேலம்  தர்மபுரி மாவட்டம் ஓசூர் மற்றும் பெங்களூரு ஆகிய பகுதிகளில் இருந்து  இறக்குமதி செய்யப்படும் மல்லிகை பூக்கள் தேவையை சமாளிக்க பெரிதும்  உதவுகின்றன.


இந்நிலையில் தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகரித்துள்ள  மல்லிகை பூக்களின் உற்பத்தி மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இறக்குமதி  செய்யப்படும் பூக்களின் அளவு ஆகியவற்றை கொண்டு கிலோ ரூ.200க்கு என மிக  குறைந்த விலையில் உதிரிப்பூக்கள் விற்கப்படுவது பெண்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என  ஒன்றாக வரக்கூடிய பண்டிகை காலங்களில் கிலோ ரூ.800, ரூ.1000க்கு விலை  கொடுத்து இறக்குமதி செய்யப்படும் பூக்களின் விலை முழம் ரூ.50, ரூ.60 என  அதிகபட்சமாக விற்பதுண்டு. ஆனால் தற்போது உதிரிப்பூக்கள் கிலோ  ரூ.200க்கும், தனித்தனி பாக்கெட்டுகளில் 50 கிராம் பூக்கள் ரூ.10க்கும்  விற்கப்படுவதால் சாலையோரங்களில் மல்லிகை பூக்கள் முழம் ரூ.20க்கு  விற்கப்படுகிறது. பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் திறக்கப்படும் ஜூன், ஜூலை  மாதங்களில் மல்லிகை பூக்களின் விலை அதிகரிக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

158total visits,2visits today
Leave a Reply

Optimization WordPress Plugins & Solutions by W3 EDGE
%d bloggers like this: